காசாவில் அறுபது நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை உட்பட பல யோசனைகளை உள்ளடக்கிய 60 நாள் யுத்தநிறுத்த திட்டமொன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேல் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும் ஹமாஸ் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் யுத்த நிறுத்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை அமெரிக்காவின் யுத்தநிறுத்த திட்டத்தில் 60 நாள் யுத்த நிறுத்தம், ஹமாசிடம் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பது, இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுதலை போன்ற யோசனைகள் காணப்படுவதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் யுத்த நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதும் காசாவிற்குள் ஐநா மற்றும் மனிதாபிமான அமைப்புகள் ஊடாக மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படவேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நிரந்தர யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததும் ஹமாசின் பிடியில் உள்ள ஏனைய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்,யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததும இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் என அமெரிக்கா தனது யுத்தநிறுத்த திட்டத்தில் தெரிவித்துள்ளது.