சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனிதவலு அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து ஜெயிக்கா ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (22) திருகோணமலை மாவட்ட செயலக உப மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இரண்டாம் காலாண்டுக்கான எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
ஒவ்வொரு பிரதேச செயலக மட்டங்களிலும் உருவாக்கப்பட்ட மற்றும் உருவாக்கவுள்ள தொழில் ஆதரவு பிரிவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் சிஹின திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் மேலும் பேசப்பட்டன.
மற்றவர்களுடன் தங்கி வாழ்வதில் இருந்து தங்களைத் தாங்கள் வலுப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள், மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




