இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(13) மூதூர் தங்கபுரத்தில் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மூதூர் கிழக்கில் கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்ட தடைகள், கைதுகள், நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றின் காரணமாக இவ்வருட நினைவேந்தல் செயற்பாடுகளை சட்ட ஏற்பாடுகளுக்கமைய நேர்த்தியாக ஒழுங்கமைத்துச் செயற்படுத்தும் நோக்கில் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்துக்கான நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய சம்பூர் தொடக்கம் வெருகல் வரையான பிரதேசத்தில் சுமார் ஏழு இடங்களிலும் திருகோணமலை நகரப்பகுதியில் இரண்டு இடங்களிலும் நினைவேந்தல் செயற்பாடுகளைத் தனியாகவும், ஏனைய அமைப்புக்களுடன் இணைந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் பள்ளிக்குடியிருப்பு தங்கபுரத்தில் இரண்டாம் நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது.நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் செயற்பாடுகள் நாளை (14) கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தில் மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பதோடு இச் செயற்பாடுகளுக்கு அனுசரனை வழங்கும் அனைவருக்கும் எமது நன்றிகளையும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துக் கொண்டது.
