யாழ்ப்பாணம், மிருசுவிலில் எட்டுத் தமிழர்களின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் சுனில் ரத்னாயக்க என்ற ஸ்டாவ் சார்ஜண்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை இன்று உயர்நீதிமன்றம் பூர்த்தி செய்தது. தீர்ப்பு அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதுவரையில் ஸ்டாவ் சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்க நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்த உயர் நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
நீதியரசர்கள் யஸந்த கோத்தாகொட, மஹிந்த சமயவர்த்தன, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரைக் கொண்ட ஆயமே இன்று இந்த வழக்கு விசாரணையைப் பூர்த்தி செய்து தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைத்தது.
அப்பாவி பொதுமக்கள் எண்மர் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் கோரமாகக் கொல்லப்பட்ட வழக்கு ‘ட்ரயல் அட் பார’ முறைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட போது சுனில் ரத்னாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்ப்பு ஏகமனதாக வழங்கப்பட்டது. ஏனைய 4 இராணுவத்தினரும் போதிய ஆதாரமில்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரணை செய்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம், ‘ட்ரயல் அட் பார’ நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்று அங்கீகரித்திருந்தது.
2015 ஜூன் 25ஆம் திகதி ‘ட்ரயல் அட் பார’ மன்றின் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்,2021 மார்ச் மாதத்தில் சுனில் ரத்னாயக்கவுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இப்போது தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஐந்து மனுக்களில் ஒன்று கொல்லப்பட்டவர்களின் ஒருவரின் மகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அனுசரணையுடன் அந்த மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதிட்டு இருந்தார்.
அதேபோல் மனித உரிமைவாதி அம்பிகா சற்குணநாதன் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் சார்பிலும் சுமந்திரன் முன்னிலையாகி வாதிட்டு இருந்தார்.
இவற்றைத் தவிர மேலும் இரண்டு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் இந்த விடயங்களை ஒட்டி தாக்கல் செய்யப்பட்டிருந்தன. உயிரிழந்த ஒருவரின் உறவினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஜிப்ரி அழகரட்ணம் முன்னிலையாகி வாதிட்டிருந்தார்.