கிரேன்ட்பாஸ், நாகலகம் வீதி பகுதியில் நேற்று (17) இரவு இருவர் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலால் ஏற்பட்டது என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று இரவு 9:30 மணியளவில் நடைபெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீதியில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை இலக்கு வைத்து 9 மில்லிமீட்டர் வகை துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு அருகில் இருந்த CCTV கெமராக்களில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நிபுன லக்ஷான் என்று அழைக்கப்படும் “கொட்டியா” மற்றும் 37 வயதான ஷான் அகமட் ஆகியோராவர்.
இவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது நிலைமை பாரதூரமானதல்ல என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் நிபுன என்ற நபரின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், சேதவத்த கசுன் என்ற நபரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு சேதவத்த கசுனுக்கு சொந்தமான வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இன்று (18) காலை கிரேன்ட்பாஸ் மாதம்பிட்டிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களை கைது செய்யும் பொருட்டு கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.