அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருக்கிடையிலான தொழிற்சங்க பேச்சுவார்த்தை கடந்த (28) அம்பாறை மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையிலான சங்கத்தின் உயர்மட்ட குழுவினர் பங்கு கொண்ட இப் பேச்சுவார்த்தையில், 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எஸ். லோகநாதன் உரையாற்றினார்.
பின்வரும் கோரிக்கைகள் இங்கு முன் மொழியப்பட்டது.
- கிழக்கு மாகாண வீதி அபிலிருத்தி திணைக்கள பாராமரிப்பு ஊழியர்களை சேவையில் உறுதிப்படுத்தலும் பதவியுயர்வும்.
- கடந்த இரு வருடங்களுக்கு மேல் அரச சேவை மற்றும் மாகாண அரச சேவையில் கடமையாற்றும் வெளிவாரிப் பட்டதாரி உத்தியோகத்தர்களின் பட்டதாரி சேவைக்கு உள்வாங்கி MN-3 ற்கு பதவி உயர்வு செய்தல்.
- கடந்த 5 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் சுமயா மய நிவாரண அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு புதிய நிர்வாக கற்றறிக்கையை வெளியிடுமாறு கோருதல்.
- அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விழா முற்பண கொடுப்பனவை ரூபா. 10,000 இல் இருந்து 25,000 ரூபாவாக உயர்த்துதல்.
- வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்படும் உத்தியோகத்தர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் செயற்திட்டத்தை அமுல்படுத்தல்.
- கிழக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடாத்தி நடைமுறைப்படுத்துதல்.
- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவை தரம் 1 இல் உள்ள சிங்கள அதிகாரி ஒருவரை நியமித்தல்.
- கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் ஒருவரை நியமித்தல்.
- கல்முனை கிட்டங்கி பாலத்தில் வெள்ள காலத்தில் உயிரிழப்பு ஏற்படுவதால் புதிய பாலம் ஒன்றை அமைத்தல்.
- கடந்த 06 வருடகாலமாக கடமையாற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்தல்.
- அரச நிருவாக சுற்றறிக்கை 10/2000க்கு அமைவாக மாகாண அமைச்சுக்களின் ஆலோசனை சபைகளை அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக பிரதி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்தையின்போது இக்கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாகாண சபைக்குரிய கோரிக்கைகளை ஆளுநருடன் பேச்சுவார்தை நடத்தி நடைமுறைப்படுத்துவதாகவும் கிராமிய அபிருத்தி சமூக வலுவூட்டல் மற்றும் சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.