வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குடத்தனை பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அண்மைக்காலங்களில் பருத்தித்துறை நகரசபையினர் திண்மக் கழிவுகளை கொட்டி வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை (29) அன்று நடைபெற்ற யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் இப் பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இம் முறைப்பாட்டில், திண்மக் கழிவுகளை நகரசபையினர் தமது விவசாய இடங்களில் கொட்டுவதால் தாம் பல சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக குடத்தனை மக்களால் கூறப்பட்டது.
இவ் இடத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர் சுட்டி காட்டியதை தொடர்ந்து பதிலளித்த யாழ் மாவட்ட செயலாளர் இனிமேல் இவ் இடத்தில் பருத்தித்துறை நகர சபையினர் திண்மக் கழிவுகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வன்மையாக கண்டித்தார்.
இவ் விடயத்தை பற்றி குறித்த கிராம மக்கள் குறிப்பிடுகையில்,
யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் தமது இடத்தில் இருந்த கழிவுகளை அப்புறப்படுத்தியதாகவும், இவ்வளவு காலமும் இவ் பிரச்சினை சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கூட்டத்திற்கு முதல் நாளும் மற்றும் கூட்டத்தன்றும் நடைபெரும் போலியான செயற்பாடுகள் மற்றும் போலியான வாக்குகளில் நம்பிக்கை இல்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நகரசபையினர் தொடர்ந்து திண்மக் கழிவுகளை கொட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனவும் கூறியுள்ளனர்.


