“தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது என்றும், அதனால் வெகுவிரைவில் பிரதமர் பதவியிலும், அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது. அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் அவதானம் செலுத்தப் போவதில்லை.” – இவ்வாறு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உப்பு பிரச்சினை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் தற்போது அமைச்சரவை மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. பொதுவான இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றோம்.
அமைச்சரவை மாற்றம் மற்றும் பிரதமர் பதவியில் மாற்றம் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் கொள்வது முற்றிலும் அடிப்படையற்றது.
அமைச்சரவையில் சகல உறுப்பினர்களும் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்ற நிலையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை.
ஊழல், மோசடிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவோம்.
கடந்த கால அரசுகள் ஊழல்வாதிகளைப் பாதுகாத்தது. எமக்கும் ஊழல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
நீதிமன்றம் மற்றும் விசாரணை நிறுவனங்கள் சுயாதீனமான முறையில் செயற்படுகின்றன. நீதிமன்றம் மற்றும் விசாரணை நிறுவனங்களின் செயற்பாடுகளில் எமது அரசு தலையிடவில்லை.
ஆகவே, ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவதை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்.” – என்றார்.