ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உற்பத்திக் கைத்தொழில்களை பயனுள்ளதாக முன்னெடுத்தல், ஒருங்கிணைத்தல், அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் ஆரம்ப முதலீடுகள் மேற்கொள்ளல் மற்றும் அவற்றின் முறையான கண்காணிப்பு, முதலீட்டு சபைகளை அண்டிய உள்ளூர் சிறு அளவிலான கைத்தொழில்களை உருவாக்குதல் மற்றும் சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் வணிகக் கடன்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பரவலாக ஆராயப்பட்டது.
கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
உள்ளூர் கைத்தொழிலாளர்களை வலுப்படுத்த இறக்குமதி கட்டுப்பாடுகளை செயற்படுத்துதல் மற்றும் கணக்காய்வு செய்தல், நிர்மாணத்துறைசார் கொள்முதல் செயற்பாட்டில் உள்ளூர் விநியோகஸ்தர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துதல், இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் கைத்தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதன் முழு வருவாயையும் தேசிய பொருளாதாரத்தில் இணைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.