யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் இன்று உறுதியுரையைச் செய்தார்.
யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையை மேற்கொண்டார்கள்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட (விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ். மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையை மேற்கொண்டார்.
எதிர்வரும் நாட்களில் உள்ளூராட்சி சபைகளில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளிவந்துள்ளது.
“யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனைத் தடுப்பதற்கு வழக்குத் தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



