அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை மாலை பெண் வைத்தியர் ஒருவர் துஷ் – பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாயை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34 வயதுடைய பிரதான சந்தேகநபர் அனுராதபுரம் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரின் சகோதரி உட்பட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மற்றைய சந்தேகநபர், பாலியல் துஷ் – பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரிடமிருந்து பிரதான சந்தேகநபரால் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய பெண்ணும், 27 வயதுடைய ஆணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.