மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்காக எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு சின்னஊறணி அமெரிக்கமிசன் மண்டபத்தில் மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கேற்கவுள்ள புதிய அரசியல் வாதிகளுக்குப் புதிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் விகையில் இந்த விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.அர்ச்சுதன் வளவாளராகக் கலந்து கொண்டு பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பதற்கான நடைமுறைச் சட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.
செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான், மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட உறுப்பினர் சியாமினி மற்றும் பெண் அரசியல் பங்குபற்றுனர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேர்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுலுக்கு வரவுள்ள நிலையில் இச்சட்டங்களில் குறிப்பாக ஊழலுக்கு எதிரான சட்டங்களும,; உள்ளுராட்சி தேர்தலில் பெண்கள் பங்குபற்றுதலில் உள்ள சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் விரிவாக கருத்துகள் வழங்கப்பட்டதுடன் உள்ளுராட்சிமன்ற நடைமுறைகள்,அதன்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன.


