வவுனியா பொலிசாரின் திடீர் சுற்றி வளைப்பில் வைரவபுளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து போதைப் பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் விசேட பொலிஸ் குழு வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி ஒன்றில் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த சிறிய வெற்றிலை கடை ஒன்றினை சுற்றி வளைத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த 140 கிராம் மாபா, ஒரு கிலோ மாபா கலந்த பாக்கு உள்ளிட்ட போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தை நடத்தியர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.