யாழ் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரின் சண்டித்தனம் – பொலிஸாரை வைத்து யூடியூப்பரை மிரட்டிய வைத்தியர் மலரவன்!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் கடிந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.

குறித்த பெண், வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் தனது தாயாருக்கு உணவு எடுத்துச் செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்னொருவர் மீது தாக்குதல் நடாத்தவும் முயன்றுள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் ஒருவர் அவரை அவரை தடுத்துள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண் காணொளியாக தனது கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் இந்த அராஜகம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து. அத்துடன் குறித்த பெண்ணின் மகன் யூடியூப்பர் என்பதனால் அந்த விடயத்தை தனது யூடியூப்பிலும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் வைத்தியர் மலரவன் அந்த இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் அந்த இளைஞனை விசாரணைக்காக அழைத்திருந்தனர். இதன்போது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட வைத்தியர் மலரவனும் அவ்விடத்தில் இருந்ததாக அந்த இளைஞனால் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் ஆரம்பமான நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களாம் வைத்தியர் மலரவனும் குறித்த இளைஞனை மிரட்ட தொடங்கினர்.

இதன்போது பொலிஸார் குறித்த இளைஞனிடம் “நீ ஊடகவியலாளரா? வீடியோ எடுப்பதற்கு உனக்கு அனுமதி வழங்கியது யார்? என மிரட்டினர்.

அதற்கு குறித்த இளைஞன் தனது தாயார் அவரது பாதுகாப்பு கருதியே காணொளி பதிவிட்டதாகவும், அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தனது தாயாரை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினார்.

அதற்கு வைத்தியர் மலரவன் “ஒரு நாளைக்கு பலர் வைத்தியசாலைக்கு வருகின்றார்கள். ஆகையால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலைச்சுமை யில் இருப்பார்கள்.

அவர்கள் அநாகரிகமான முறையில் திட்டினால் அந்த திட்டினை நீங்கள் வாங்கத்தான் வேண்டும். நீ பதிவிட்ட வீடியோவால் எமக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே நீ விடியோவினை அழிக்க வேண்டும்.

எனது ஊர் வல்வெட்டித்துறை, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். மீடியா, யூடியூப்பர் இவர்களால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் என்ன செய்தாலும் எனக்கு புரொமோஷன் (promotion) தான் கிடைக்கும்” என மிரட்டினார்.

அவரது மிரட்டலுடன் பொலிஸாரும் இணைந்து மிரட்டி விட்டு அந்த இளைஞனை அனுப்பி வைத்தனர்.

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மக்களுடன் மட்டுமல்ல வைத்தியாலையில் கடமை புரியும் ஊழியர்களுடனும் தகராறில் ஈடுபடுவதாக அறிய முடிகின்றது.

அத்துடன் இவர் ஏற்கனவே முறைகேடாக நடந்ததற்கு இரண்டு வாரங்கள் வேலையால் இடைநிறுத்தப்பட்டவர் என கூறப்படுகிறது. அத்துடன் அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியர் ஒருவரின் உறவினர் என அறியமுடிகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை நிர்வகிப்பது பணிப்பாளர் சத்தியமூர்த்தியா அல்லது வைத்தியர் மலரவனா அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாக மக்களும் நோயாளிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.