யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு!

0

கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இன்று அந்த கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பெப்ரவரி 4 ம் நாள், 76 வருடங்களுக்கு முன்னர் தமிழர் தேசத்தின் இறைமையை பிரித்தானியரிடமிருந்து கையகப்படுத்திய சிங்கள – பெளத்த பேரினவாதம், தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தை சூறையாடிய கருப்பு நாளாகும்.

முழுத் தீவினதும் ஆட்சியதிகாரத்தினைத் தனது கையில் வைத்துக் கொண்டு, தமிழர் நிலங்களை ஆக்கிரமித்தும், தமிழ் இனவழிப்பை மேற்கொண்டும், தமிழர் தேசம் மீதான திட்டமிட்ட சிங்கள- பெளத்த ஆக்கிரமிப்புக்கள், அதன் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பையும் சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்து வருகிறது.

முடிவின்றித் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பிலிருந்து தமிழர் தேசம் பாதுகாக்கப்படல் வேண்டுமாயின், தமிழ்த் தேசத்தின் இறைமையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு அமைய வேண்டும். இனவழிப்புக்கான பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்.

அந்தவகையில் – ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ம் திருத்தத்தினை முற்றாக நிராகரித்தமை, திம்புப் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியமை, பொறுப்புக்கூறலை வலியுறுத்தியமை உள்ளிட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக அறிக்கையின் உள்ளடக்கமானது, இதுவரைகாலமும் சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலிலிருந்து சிறிலங்காவை பாதுகாத்தவர்களையும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு கடிதங்களை எழுதி, தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை நீக்கம் செய்யும் வகையில் பெய்யான கருத்தியலை விதைத்த தரப்புக்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அந்தவகையில் – பெப்ரவரி 4 ம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Capture

Leave A Reply

Your email address will not be published.