பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் போராட்டம்.!

0 10

சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில்  பொலிசாரின் பல தடைகளைத் தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறியும், பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) பொதுமக்கள் கறுப்புக் கொடி ஏந்தியவாறு கல்லடி செபஸ்தியான் தேவாவாலயத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினமான  இன்றைய நாளை தமிழர்களின் கரிநாள் என வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பிரகடனப்படுத்தியதோடு, கிழக்கில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்திபூங்காவரையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர். இதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிசார் தடைவிதித்ததுடன் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 17 பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெற்று இரவிரவாக  உரியவர்களுக்கு வழங்கி வைத்தனர். அதேவேளை  மட்டக்களப்பு நகரில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் கல்லடிப் பாலப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரும், கலகமடக்கும் பொலிசார் மற்றும் தண்ணீர் வீசும் பவுசர் என்பன குவிக்கப்பட்டிருந்தன.
IMG 2949
இதேவேளை திருகோணமலையில் இருந்தும் அம்பாறையில் இருந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு பேருந்துகளில் வந்தவர்களை வாகரை மற்றும் கல்லாறுப் பகுதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில்  நிறுத்தி பொலிசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் காலை 10 மணிக்கு கல்லடி செபஸ்தியான்  தேவாலயத்தில் கோட்டும் மழையிலும், வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டு மாநகர  முன்னாள் முதல்வர் ரி. சரவணபவன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடகிழக்கு தலைவர் வேலன் சுவாமி , வடகிழக்கு முன்னேற்றச் சங்க தலைவர் த.லவகுமார், பல்கலைக்கழக மாணவர்கள்  உட்பட நூற்றுக்கணக்கானோர்; ஒன்றுதிரண்டனர்.

அங்கு ஒள்றுதிரண்ட மக்கள் அங்கிருந்து காந்தி பூங்காவரையில் ஆர்பாட்டமாக செல்ல பொலிசார் தடைவிதித்ததையடுத்து தேவாலயத்திற்கு முன்னால் வீதியில் கறுப்பு கொடிகளையும் காணாமல் போன உறவுகளின் உருவபடங்களையும் ஏந்தியவாறு தலையில் கறுப்பு துண்டு கட்டி தமிழர்களின் நிலத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறும்  சுயநிர்ணயத்துடன் வாழ வழி செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
IMG 2942

IMG 2932
இதனையடுத்து கல்லடி பாலத்தில் இருந்து அரசடி வரையிலான பிரதான வீதி மூடப்பட்டதையடுத்து மட்டக்களப்பிற்கு உள்நுழையும் மற்றும் மட்டக்களப்பில் இருந்து  காத்தான்குடி நோக்கிச் செல்லும் வாகனங்கள் வேறு வீதிகளால் பயணித்ததுடன், பகல் 12 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.  

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.