பலாலியில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை ‘மீளவும் கைப்பற்ற முயற்சி’

0

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவிக்கின்றார்.

“வலி வடக்கில் இன்னும் 3000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியும் இதனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக குரும்பசிட்டி, கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய பிரதேசங்களில் மேலும் 500 பரப்புகளை எடுக்க அளவீட்டுத் திணைக்களம் முயற்சிக்கிறது.

கிராம சேவகர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உடனடியாக இதனை நிறுத்த வேண்டும். பலாலி விமான நிலையத்தை சாட்டி மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கிறது. இதனையும் நிறுத்த வேண்டும்.”

ஜனவரி 30ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, இந்த காணியை சுவீகரிக்கும் முயற்சி தொடர்பில் பிரதேச சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, அதுத் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் தமது பிரதேசத்தில் நில அளவீடு செய்ததாக குரும்பசிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியாமல் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை அளவீடு செயய, வருவதில்லை என சுட்டிக்காட்டும் எஸ். சுகிர்தன், பிரதேச செயலாளர் மக்களிடம் பொய்களை கூறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தை அண்டிய மக்களின் காணிகளில் விமான நிலையம் என்ற பெயரில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதுவும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ். சுகிர்தன் மேலும் வலியுறுத்தியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.