எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வர் வழிசெய்ய வேண்டும்.!

இந்திய முதலமைச்சர் எங்களுடைய படகுகளை தங்களுடைய எல்லைக்குள்ளே அனுமதித்து அங்கு மீன் பிடிப்பதற்கு வழிவகுப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. அதனை செய்ய முன்வராமல் தங்களுடைய மீனவர்களது நலன் கருதி எங்களுடைய வளங்களை அழித்து, எங்கள் வாழ்வாதாரத்தை சூறையாடி, எங்களை பட்டினிச்சாவிலே இட்டுச் செல்வது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மீது கருணை இல்லாத அல்லது துரோகமான செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் தொடர்ச்சியாக இழுவைமடி தொழில் செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கே பிடிபட்ட மீனவர்களை விடுவிக்கும்படி வற்புறுத்தி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில்  தமிழ்நாட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அந்த நாட்டின் பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு வினயமான கடிதத்தை அனுப்பி இருக்கின்றார். இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும், தொடர்ந்து பிடிக்க கூடாது என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

அத்தோடு இலங்கையிலே 2018 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டத்தை மீள் பரிசீலனை செய்து அந்த சட்டத்தை இல்லாது ஒழிக்கும் வகையிலே இலங்கையை வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருக்கின்றார்.

தொடர்ச்சியாக எங்களுடைய மீனவர்கள் படும் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் எண்ணில் அடங்காது. அந்த வகையிலே உங்களது இழுவைமடி தொழிலாளர்களை அழைத்து எங்களது எல்லையை தாண்டி வந்து வாழ்வாதாரத்தையும் வளங்களையும் அழிக்காமல் இருக்கக்கூடிய வகையிலே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என முதலமைச்சரவர்களை நாங்கள் பலமுறை கேட்டிருக்கின்றோம். இதன்மூலம் இழுவைமடி தொழிலை நிறுத்த முடியும் என ஆலோசனை வழங்கியிருந்தும் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

தமிழக முதலமைச்சரவர்கள் எங்களது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கு தன்னாலான நல்ல முயற்சியை எடுத்து, எங்களுடைய வாழ்வாதாரத்தை எங்களுக்கே வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஏழரை கோடி மக்களின் ஆயிரத்தில் ஒரு பகுதியான இழுவைமடி தொழிலாளர்களின் தொழிலை நிறுத்தி மாற்று முறை தொழிலுக்கு அவர்களை மாற்றி, பாரம்பரிய முறையில் தொழில் செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றேன் – என்றார்.

Comments are closed.