பாடசாலை மாணவர்களுக்கு தளபாட வசதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் கல்விக்கான கருத்திட்ட விளக்க நிகழ்வில் முஸ்லிம் எயிட் தலைமையக உறுப்பினர்கள் கௌரவிப்பு
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அல் நஜாத் பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு 6ம் திகதி காலை நடைபெற்றது.
இவ் வைபவத்தில் முஸ்லிம் எயிட் இலண்டன் தலைமையகத்தின் தலைவர் முஸ்தபா பாரூகி, உப தலைவர் பாரியா அலி, முஸ்லிம் எய்ட் யுகே யின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மொகமட் அப்துல் அஸீஸ், அட்லீன் ரசாக், உலகலாவிய நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அபு அகீம் மற்றும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பணிப்பாளர் பைசர்கான் ஆகியோருடன் முஸ்லிம் எய்ட் சிரேஷ்ட ஊழியர்களும் வலயக்கல்வி அலுவலக சிரேஷ்ட ஊழியர்களும் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறான தளபாடங்கள் வினியோகமும் கல்வி அபிவிருத்திக்கான பல்வேறு செயற்பாடுகளும் மேலும் பல பாடசாலைகளுக்கு சமூக பங்குபற்றுதலுடனான கல்வி அபிவிருத்தி என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்படி முஸ்லிம் எய்ட் தலைமையக உறுப்பினர்களும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஊழியர்களும் மறுநாள் நேற்று (07) கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு ஒரு செயலமர்வாக அமைந்தது. இச் செயலமர்வு, சமூக பங்குபற்றுதலுடனான கல்வி அபிவிருத்தி என்ற தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் 4வது கட்டத்தை ஆரம்பிக்க முன்னர் அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் முழுமையான விளக்கத்தை அளிக்கும் ஒரு செயலமர்வாகும்.
இச் செயலமர்வு கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இச் செயலமர்வில், முஸ்லிம் எய்ட் யுகே தலைமையக உறுப்பினர்கள், வலயக் கல்வி அலுவகத்தினால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஒருபகுதியாக முஸ்லிம் எய்ட் யுகே உறுப்பினர்களுக்கும் கிண்ணியா கல்வி வலய சிரேஷ்ட ஊழியர்களுக்கும் இடையில் எதிர்காலத்தில் கல்வி முன்னேற்றச் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஒரு சிறு கலந்துரையாடலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.