கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? – தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!
அடுத்த நாடாளுமன்ற தேர்தலை நாடிபிடித்துப் பார்ப்பதுதான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என கூறிக் கொள்ளும் உதிரிகளின் எண்ணப்பாடே தவிர தாங்கள் குறிப்பிடுவது போன்று இது தமிழ் தேசியத்துக்கான குறியீடோ, அடையாளமோ அல்ல என்பதே ஜதார்த்தம் இதனை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள் என என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்’ ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09.08.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில் –
கடந்த காலங்களில் மக்களின் ஆணையை பெற்று என்ன செய்தீர்கள்? 1977 மற்றும் 2004 ஆம் ஆண்டு மக்கள் சக்தியை காட்டியதாக பெருமைப்படுவதில் பயனில்லை.
1977 ஆம் ஆண்டும் மக்கள் ஆணையை வழங்கினார்கள். ஆயினும் அவர்களை அவலத்தில் தள்ளிவிட்டதை தவிர வேறெதனையும் சாதித்ததில்லை. பின்னர் 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்களை எவ்வாறு பெற்றீர்கள் என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தங்களுக்கு சாட்சியாக உள்ளார் என்பதையும் நாடே அறிந்திருந்தது.
அவ்வாறிருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி மக்கள் நகரும்போது 22 பேரும் என்ன செய்தீர்கள்? சர்வதேசம் ஊடாக குரல்கொடுத்தீர்களா? அல்லது மக்களைனத்தான் காப்பாற்றினீர்களா? எதுவும் இல்லை. நாட்டைவிட்டு ஓடி வெளிநாடகளில் பதுங்கி இருந்தீர்கள்.
இதேபோன்று வடக்கு – கிழக்கை .ஜே.வி.பி பிரிக்கும்போது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்’ன செய்தீர்கள்? குறைந்தது நீதிமன்றத்தையாவது நாடிநீர்களா? அதுவும் கிடையாது.
2005 இல் ரணில் விக்ரமசிங்கவை புலிகள் நிராகரித்தனர் என கூறுகின்றீர்கள். ஆனால் என்ன நடந்தது என்பதை வரலாறு கூறிச்சென்றது.
வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்ட அன்றைய புத்தசாசன அமைச்சின் ஊடாக சஜித் பிரேமதாச முயற்சிகளை மேற்கொண்டபோது தாங்கள் கொண்டவந்த நல்லாட்சி அரசு என மார்பு தட்டியவர்கள் யார்? முதுண்டு கொடுத்தவர்கள் யார்? நல்லாட்சி அரசின் காவலர்கள் என இறுமாப்பு கொண்டவர்கள் யார்? இவ்வாறு துதிபாடியும் 1000 விகாரைகள் திட்டத்தை தடுக்க முடியாது போனது ஏன்?
13 ஐ பற்றி ரணில் பேசுகின்றார் அதை தெற்கில் பேசுவாரா என நாமல் ராஜபக்ச கூறியதாக கருத்துச் சொல்லியுள்ளீர்கள். வடக்கு – கிழக்கு இரண்டு பகுதிகளாக உள்ளன. அதில் வடக்கில் மாகாண அரசை நடத்தியதன் இலட்சணத்தை மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே நன்கறியும். அதேபோன்று திறமையில்லாதவர்கள் நிர்வாக ஞானம் இல்லாதவர்கள், திட்டமிடல், ஆற்றலின்மை, அக்கறையின்மை அதில் வெளிப்பட்டதையும் நன்கு அறியமுடிந்தது. குறுகிய நிர்வாக அலகான மாகாண சபை ஊடாக ஏதாவது மக்களுக்கு சாதித்தீர்களா?
கடந்த காலங்களில் இரண்டு தடவை மக்கள் ஆணை தந்தார்கள் என கூறிவருகின்றீர்கள். ஆனால் அதில் வரிச்சலுகை இல்லாத வாகனங்கள், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி மற்றும் சலுகைகள், மாவட்ட அபிவிருத்திக் குழு பிரதேச அபிவிருத்திக் குழு என பதவிகளையும் சலுகைகளையும் பெற்றீர்களே தவிர வாக்களித்த மக்களுக்கும் வாக்குறுதி வழங்கிய மக்களுக்கும் என்ன பெற்றுக்கொடுத்தீர்கள்?
புலிகளை பலவீனப்படுத்தி உடைத்தது என கூறிவருகின்றீர்கள். அதை ஏன் அரசிடம் எதிர்பார்க்கின்றீர்கள், ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்த ஜே.விபியை தனது இனமென்றும் பாராமல் ஒழித்தது அரசாங்கம். அப்படி இருக்கும்போது புலிகளை பிரித்தார்கள் உடைத்தார்கள் என எதிர்பார்த்தது உங்களது தவறு. எந்த அரசாங்கமும் அவ்வாறுதான் சிந்திக்கும்
தமிழ் பொது வேட்பாளர் என்பதிலிருந்து “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நாடிபிடித்துப் பார்ப்பதுதான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என கூறிக் கொள்ளும் உதிரிகளின் எண்ணப்பாடே தவிர தாங்கள் குறிப்பிடுவது போல இது தமிழ் தேசியத்துக்கான குறியீடோ, அடையாளமோ அல்ல என்பதே ஜதார்த்தம் இதனை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, சிங்களப்பெரும்பான்மையின வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவதாக பகிரங்கமாக அறிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.