இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் ஒருநாள் தொடரை 2 – 0 என இழந்தது இந்திய அணி.
27 ஆண்டுகளில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழப்பது இதுவே முதல் முறை. அதிலும் பலவீனமான இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் கொண்ட இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி டை ஆனது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1 – 1 என சமன் செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், முதல் இரண்டு போட்டிகளை விடவும் மூன்றாவது போட்டியில் மிக மோசமாக ஆடிய இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 45 ரன்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களும் குவித்தனர்.
அடுத்து வந்த குசால் மென்டிஸ் 59 ரன்கள் சேர்த்தார். அதன் பின்பு மிடில் ஆர்டரில் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்தனர். இறுதியில் கமிந்து மென்டிஸ் 23 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரியான் பராக் 9 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். சிராஜ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
சிவம் துபே விக்கெட் வீழ்த்தாத போதும் நான்கு ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அபாரமாக பந்து வீசி இருந்தார்.
இந்திய அணிக்கு 249 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. கொழும்பு மைதானத்தில் இது சவாலான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சேஸிங்கில் மோசமாக சொதப்பியது. ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஸ்ரேயாஸ் 8, அக்சர் படேல் 2, ரியான் பராக் 15, சிவம் துபே 9 ரன்கள் என வரிசையாக சொற்ப ரன்களில் விக்கெட்களை இழந்தனர்.
வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் போராடினார் அவர் 30 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. 110 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், ஸ்பின்னர்களை எதிர்கொள்வது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இந்த விவகாரத்தை ஒவ்வொரு வீரரும் தனித்தனியே சிந்தித்து, தங்களுக்கேற்ற ஆட்ட நுணுக்கங்களுடன் விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு போதும் உங்களால் மனநிறைவு கொள்ள முடியாது. இதனை ஜோக்கிற்காக சொல்லவில்லை. அதுதான் உண்மை.
நான் கேப்டனாக இருக்கும் போது நிச்சயம் வீரர்கள் மனநிறைவு அடைய முடியாது. ஆனால் சிறந்த கிரிக்கெட்டை ஆடியவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்களை விடவும் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது.
நாங்கள் பிட்சை பார்த்து, அதற்கேற்றபடி காம்பினேஷனை உருவாக்கினோம். அதேபோல் சிலர் இந்த தொடரில் கவனம் ஈர்த்துள்ளார்கள். சிலர் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
சில விஷயங்கள் பாசிட்வாக அமைந்துள்ளது. அடுத்த முறை வரும் போது இதுபோன்ற பிட்ச்களுக்கு தயாராக வர வேண்டும். சில நேரங்களில் தோல்வியும் வரும். இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் முடிந்துவிடப் போவதில்லை.
அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நேரங்களில் தொடரை இழப்போம். ஆனால் அந்த தோல்விக்கு பின் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் இந்திய அணியை விடவும்
அணி சிறந்த கிரிக்கெட் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.