யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது மற்றும் அங்குள்ள குறைபாடுகளைத் தீர்ப்பது குறித்து ஆராய்வதற்காகச் சுகாதார அமைச்சின் மட்டத்தில் விசேட குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட்டுத் தனியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சனிக்கிழமை விசேட உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தௌிவுபடுத்தினார்.
வைத்தியசாலை வளாகத்துக்கு வருகை தந்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் பிராந்தியத்தின் மிக முக்கிய பிரிவான புற்றுநோய் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், விசேட புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவர்களுடன் அத்தியாவசியத் தேவைகள், மருந்துப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர், “தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்த்து, வடக்கு மாகாண மக்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நோக்கில் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்றார்.
அத்துடன், வைத்தியசாலை வளாகத்தில் தற்போது பாதியிலேயே கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுப் போயுள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் எஞ்சிய பணிகள் அனைத்தும், எதிர்வரும் காலப்பகுதியில் அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சருடன் இணைந்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க மற்றும் வடக்கு மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள், வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










