இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 31 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூன் 25 மற்றும் 26ஆம் திகதிகளிலான தரவுகளின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த மரண வீதமானது 0.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.
இதில் குறிப்பாக, இந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 17 ஆயிரத்து 208 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த மாதத்தில் நோய்த்தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகின்றது.
மாகாண மட்டத்தில் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேநேரம், நாடளாவிய ரீதியில் 124 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅவதான வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்கள் வீடுகள் மற்றும் சூழலை நீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










