பிலியந்தலை – மகரகம பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அரவ்வல பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒன்று, பிலியந்தலை – மகரகம வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, தனக்கு முன்னால் சென்ற ஓட்டோ ஒன்றை அதிவேகமாக முந்திச்செல்ல முயன்றுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக எதிரே அதிவேகத்துடன் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் அது மிக உக்கிரமாக மோதியுள்ளது.
அவ்விடத்தில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் இருந்த மின்சாரக் கம்பம் ஒன்றிலும் மிக பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் போது தூக்கி வீசப்பட்டுத் தலை மற்றும் உடல் பாகங்களில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 16 வயதுடைய மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேவேளை, இந்த விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுமுறை காரணமாகவே இந்த இளம் உயிர் பறிபோயுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










