அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும், அந்தக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் அணியின் ஊடகச் செயலாளராகவும் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லஹிரு சுபுன் சிந்தகா என்ற இளைஞரே இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற மது விருந்தொன்றின் போது, அங்கு குழுமியிருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, இந்த இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த லஹிரு சுபுன் சிந்தகா, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வீரகெட்டிய பிரதேச சபைக்குப் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அவர் களமெட்டிய மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்பிடித்துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மேலாண்மை உதவியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










