தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத் தயாரிப்பதற்காக 33 நபர்களைக் கொண்ட ‘ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் பொதுச் சபையின் இரண்டாவது கூட்டமானது யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முக்கிய தீர்மானங்கள்
- 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு நேற்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவானது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுவான அரசியல் அமைப்பு வரைவு ஒன்றை மக்கள் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தயாரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
- புதிய அரசமைப்புக்கான நகல் தயாரிப்பு
தற்போதைய புதிய அரசால் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்கள் சார்பில் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் அடங்கிய நகலைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன், அந்தக் குழு தனது பணிகளைத் தொடர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. - தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு ஆதரவு
தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது என்றும், அது சரியான பாதையில் பயணிக்கும் போது தேவையான முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் செயற்பாடுகளில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும் தனது பங்களிப்பை நல்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உத்தியோகபூர்வ கடிதமொன்றை வரைவதற்கும் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













