சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
புத்தகப் அச்சுப் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் புத்தக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“புத்தகங்களுக்கு விதிக்கப்படும் வற் வரி மற்றும் அதன் வரம்பெல்லை முறையினால் தற்சமயம் அச்சுத்துறையில் பல்முனைப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் காணப்படும் புத்தகங்கள் மீது கூட இந்த வரிகள் விதிக்கப்படுவதனால் பதிப்பகங்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படுகின்றது. இந்நிலைமையினால் உள்நாட்டு அச்சுப் பதிப்புத்துறையும், புதிய அறிவு உருவாக்கமும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
இது நாட்டின் ஒட்டுமொத்த வாசிப்புச் சமூகத்துக்கும், தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலான வெளியீட்டுத் துறையின் எதிர்காலத்துக்கும் விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும்.
கல்வியறிவை மேம்படுத்த காகிதம் மற்றும் ஏனைய அச்சுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் எவ்விதத்திலும் சாதகமானதாக அமையவில்லை.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ‘அறிவு சார்ந்த நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனப் பல நல்ல கருத்துக்களை வெளியிட்டார். 18 சதவீத வற் வரியை நீக்குவோம் எனத் தனது கொள்கைப் பிரகடன அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று நடைமுறையில் அந்த வாக்குறுதிகள் எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு இப்போதாவது அந்த வாக்குறுதிகளைச் செயல் வடிவத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
உலக நாடுகள் பலவற்றில் பதிப்புகள் மற்றும் வெளியீடுகள் துறைக்கு அதிகளவில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியம், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் கூட புத்தகங்களுக்கு இவ்வாறான வற் வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் வெளியீட்டுத் துறைக்கு என்று பொறுப்புக் கூறக்கூடிய ஒரு சரியான அமைச்சு கூட இல்லை.
அரசு, சர்வதேச நாணய நிதியம் கூறுவதற்கு ஏற்ப மாத்திரம் நடப்பதற்குப் பதிலாக, தேசிய நலனைப் பாதுகாத்துக்கொண்டு இந்த வெளியீட்டுத் துறை மீதான வரியை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புத்தகங்களின் விலைகளைக் குறைத்து, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதுடன், ஒரு வலுவான அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த முடியும்.” – என்றார்.














