ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் ஊடுருவிய “பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி” ஒன்றை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஈரான் வான் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் சர்வதேச அரசியல் மற்றும் இராணுவத் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” ஈரானிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பகைமை நாட்டின் வானூர்தியை ஏவுகணைகள் மூலம் முற்றாக அழித்துள்ளதாக ஜாம் மாவட்டத்தின் ஆளுநர் மசூத் தங்கேஸ்தானி தெரிவித்ததுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வான் பாதுகாப்புப் படையினரின் இந்தத் துரித நடவடிக்கையை அடுத்து, தற்சமயம் அந்த நகரம் முற்றிலும் வழமையான மற்றும் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி இடைமறிப்புத் தாக்குதலானது சில மணி நேரத்திற்குள் அரங்கேறியுள்ளதாக ஈரானின் உத்தியோகபூர்வ அரச ஒளிபரப்புச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.










