ஈரானின் இராணுவ எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் வருவாய் ஆதாரங்களைக் குறிவைத்து அமெரிக்க நிதித்துறை புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அதிரடியாக அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தைகளுக்கு ஈரானிய மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த ‘புளோரா’, கொமரோஸ் கொடியுடன் பயணித்த ‘ஹுவான்காயோ’ மற்றும் பனாமா கொடியுடன் பயணித்த ‘இல் கப்’ உள்ளிட்ட 8 பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் ‘வேர்த் சீன் எனர்ஜி லிமிடெட்’, டுபாயின் ‘சிம்பொனி ஷிப்பிங் அண்ட் மேரிடைம் மேனேஜ்மென்ட்’ மற்றும் ஹொங்கொங்கின் ‘மெஹ்தியேவ் டிரேடிங் கோ’ உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட், “ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படும் வரையிலும், தங்களிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரானியர்கள் ஒப்புக் கொள்ளும் வரையிலும், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.










