காணிகளை விடுவிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலிலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள் உள்ளிட்ட முக்கியமான தரப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அத்துடன் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்த தரப்பாகவும் அவர்களே உள்ளனர். இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வலிகாமம் வடக்கிலேயே கணிசமான காணிகள் இராணுவத்தின் பிடியில் உள்ளன. அவை தொடர்பான முழுத் தகவல்களும் அறிந்தவராக வலிகாமம் வடக்குத் தவிசாளரே உள்ளார். அவரும் நேற்றைய கலந்துரையாடலில் அழைக்கப்படவில்லை.










