யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சிறுவன் அருள் பயஸின் படுகொலைக்கு நீதி கோரி, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற தமக்கு அவமதிப்பே மிஞ்சியது என்று அந்தச் சிறுவனின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்விமர்சனங்களை முன்வைத்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சிறுவன் அருள் பயஸ் உயிரிழந்திருந்தார். “எம் மகனின் மரணத்துக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. மாறாக, எமது குடும்பத்தினர் மீதும் பலியான சிறுவன் மீதும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி எங்களை அவமானப்படுத்தி வருகின்றனர்” என்று உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
சிறுவனின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்கப் பொலிஸார் கடுமையாக முயற்சிக்கின்றனர் என்றும், தங்களது அன்றாடச் செயற்பாடுகளைக் கண்காணித்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இது தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திக்கக் கொழும்பு சென்றபோது, அங்குள்ள அதிகாரிகள் தங்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள் என்று கூறி அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர்கள் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எமது இல்லத்துக்கு வந்து நியாயம் பெற்றுத்தருவதாகக் கூறினார். ஆனால், அதன் பின்னர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட அவர் பதிலளிப்பதில்லை. மக்கள் பிரச்சினையைக் கண்டுகொள்ளாத இவரை எப்படி மக்கள் பிரதிநிதி என்று நம்புவது?” – என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதேவேளை, “நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எமது வீட்டுக்கு வரவில்லை என்றாலும், சபையில் எமது மகனின் கொலைக்கு நியாயம் கேட்டுப் பேசியிருந்தார். அவர் செய்ததைக் கூட ஆளும் தரப்பில் இருக்கும் இளங்குமரன் செய்யவில்லை” என்றும் அவர்கள் ஒப்பிட்டுச் சாடினர்.
அநுர அரசும் இந்த விடயத்தில் பின்னடிப்பதாகக் குறிப்பிட்ட உறவினர்கள், எமது மகனின் கொலைக்கு நியாயம் கிடைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.










