“மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் முன்னெடுக்கப்படும் கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனைகள் தொடர்பில் பொலிஸார் மற்றும் மது வரித்திணைக்கள அதிகாரிகள் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (24) நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்னத்தின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் எனப் பல்வேறு திணைக்கள பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த ஆண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் பூர்த்தியடையாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டன.
இதேபோன்று 2026 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி, உலக உணவு திட்டத்தின் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று கிராமங்கள் தெரிவு செய்ய்பட்டுள்ள நிலையில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் தேசிய வீடமைப்பு அதிகார சபை, மீள்குடியேற்ற அமைச்சு என்பனவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டங்கள், சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாநகர சபை ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும், அதற்கான உதவிகளையும் ஆதரவினை வழங்குவது குறித்தும் பல்வேறு கருத்துகளும் தெரிவிக்கப்பட்;டன.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விளையாட்டுக்கழகங்கள் எதிர்நோக்கும் மைதானப் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் மைதானப் பிரச்சினைகளை எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து தீர்த்து வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
நாவற்குடா போன்ற பகுதியில் கடந்த 35 வருடத்திற்கும் மேலாக காணி உறுதிகள் மற்றும் எந்தவித ஆவனங்களும் இல்லாத நிலையில் உள்ள மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அவற்றினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கும் முகமாக நடமாடும் சேவைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சில இடங்களில் கசிப்பு விற்பனைகள் என்பது அதிகளவில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் கடந்த காலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோதிலும் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் இதுவரையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் மட்டக்களப்பு சிரேஸ்ட அத்தியட்சகர் காரியாலய விசேட போதை ஒழிப்பு பிரிவினையும் மட்டக்களப்பு மாவட்ட மது வரித்திணைக்களம் என்பன இணைந்து கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு பணிக்கப்பட்டது.













