வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கோரவில்லை. ஜனநாயக முறைப்படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் சு.காண்டீபன் மாநகர மேயர் பதவியை கோருவதாக வெளியான செய்தி தொடர்பில் இன்று (11.05) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாநகர சபையின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்ட நான் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளேன். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அதி கூடிய வாக்குகளைப் பெற்று வீட்டு சின்னத்தில் வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராக எனது வட்டாரத்தில் நான் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக மீண்டும் அதி கூடிய வாக்குகளால் சங்கு சின்னத்தில் வெற்றி பெற்றேன்.
தேர்தல் முடிந்த பின்பே மேயர், பிரதி மேயர் யார் என தீர்மானிப்பதாக கட்சி தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. அந்தவகையில், அதி கூடிய வாக்குளைப் பெற்று நான் வென்ற நிலையில் என்னை பிரதிநிதித்துவப்படுத்தும் புளொட் அமைப்பும், எனது ஆதரவாளர்களும் எனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். நான் கோரவில்லை.
ஜனநாயக முறைப்படி எனக்கு மேயர் பதவி தந்தால் நான் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து இந்த மாநகரத்தை முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன். அடுத்த முறையும் சங்கு சின்னத்தில் அதி கூடிய வாக்குளைப் பெற்று வெல்லும் நிலையை உருவாக்குவேன். மக்களின் விருப்பதிற்கு கட்சி தலைமைகள் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.










