கிளிநொச்சி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் அதிலிருந்து மீண்டெழும் தன்மையினை கட்டியெழுப்பும் திட்டக் கலந்துரையாடல் இன்று(12.03.2025) நடைபெற்றது.
காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் முகமாக சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம், கிறிஸலிஸ் நிறுவனம், வறுமை பகுப்பாய்வு நிலையம் ஆகிய இணைந்து செயற்படுத்திய திட்டங்களின் மாகாணம் தழுவிய கலந்துரையாடலாக இன்றைய தினம் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
இதனூடாக பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்திய சமூக செயற்பாட்டுத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், இவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் எதிர்காலங்களில் அரச திணைக்களங்கள் இவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இவை குழுக் கலந்துரையாடல், நிபுணர் குழுக் கலந்துரையாடல், பயனாளிகளின் கருத்துக்கள், அரச அரச மற்றும் சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல்கள் போன்ற வடிவங்களில் நடைபெற்றன.
மேலும் வடக்கு மாகாணத்தில் காலநிலை மாற்றம், குடிநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு தரவுகளும் அவற்றின் மாறுபாட்டு நிலையும் தொடர்பில் விளக்கக் காட்சி நிகழ்த்தப்பட்டது.
வடமாகாணத்தில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி, பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் – திட்டமிடல் கே.கே.சிவச்சந்திரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கருணாநிதி, கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.ஜோதிலட்சுமி, பூநகரி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த விடய உத்தியோகத்தர்கள், பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்ன பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.








