“அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் துஷ் – பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.” – இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையில் இருந்த பெண் வைத்தியர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை துஷ் – பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது,
“முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைக்கப் பெற்ற நம்பத் தகுந்த தகவல்களுக்கு அமைவாகவே மாத்தறைப் பகுதியில் வீடு ஒன்று சோதனை செய்யப்பட்டது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அந்த வீட்டுக்குச் சென்று தமது அடையாள அட்டையைக் காண்பித்து, தான் வருகை தந்தமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டனர். வீட்டைச் சோதனையிடுவதற்கு வீட்டில் இருந்தவர்கள் அனுமதி வழங்கினர்.
முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பத் தகுந்த தகவல்களுக்கு அமைவாகவே நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிடைக்கப் பெறும் தகவல்களை அலட்சியப்படுத்த முடியாது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ் – பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் எடுத்துரைத்தார். இந்தச் சம்பவம் கவலைக்குரியது.
பெண் வைத்தியரைப் துஷ் – பிரயோகம் செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஐந்து பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தப் பெண் வைத்தியர் தனது கடமைகளை முடித்துவிட்டு வைத்தியர் விடுதிக்குச் சென்றுகொண்டிருந்தபோதே துஷ் – பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (நேற்றுமுன்தினம்) மாலை 6.30 – 7 மணிக்கு இடைப்பட்ட வேளையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார். விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.” – என்றார்.
