மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் மீது விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தை இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி அதில் பொருத்தப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை சேதப்படுத்தியதாகவும், சிறார்களுக்காக இரசாயன மருந்து பாவிக்கப்படாமல் நாட்டபட்டிருந்த தாவரங்கள் மற்றும் மரக்கன்று என்பன பிடுங்கி எறியப்பட்டுள்ளதாகவும் காப்பகத்தின் பணியாளர் திருமதி. திலகவதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்பட்ட சிறுவர் காப்பகத்தை தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் சிறுவர்களின் நலன் கருதி சீர் செய்து தரப்பட்டு இன்னும் சில தினங்களில் அதற்கான மின்சார வசதியை பெற்று தர தோட்ட நிர்வாகம் முன்வந்துள்ள நிலையில், இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் குறித்த பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் குழாய்களும் அடிக்கடி களவாடப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி சம்பந்தப்பட்ட விஷமிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.



