கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தற்பொழுது ஏற்பட்டுள்ள விவசாயிகளின் பயிர் அழிவு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெரும்போகத்தில் அண்ணளவாக எழுபதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் நெற்செய்கை அழிவு நிலைக்கு சென்றுள்ளன.
அந்த வகையில் மழை வீழ்ச்சி மற்றும் சீரற்ற காலநிலையினால் எமது மாவட்டத்தின் பெரிய குளமான இரணைமடுக்குளம் நான்கு அல்லது ஐந்து தடவைகளுக்கு மேல் வான் பாய்ந்திருந்தது. இதன் காரணமாக நெற் செய்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்நிலையில் இதனை மதிப்பிடும் முகமாக கமநல காப்புறுதி சபை, பிரதேசசெயகம், விவசாயத் திணைக்களம் ஆகியவை இணைந்து மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இவை நேர அட்டவணையின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி குறித்த குழுவினருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.