விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 10.01.2025 அன்று ஆளுநருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் வாய்மொழி மூலமாகவும், 15.01.2025 அன்று எழுத்துமூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டது.
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
கடந்த காலங்களில் மத்திய அமைச்சர்களாலும் எமது மாகாண சபைக்கு உரித்தான முதலமைச்சராலும் காலத்துக்கு காலம் பதவியிலிருந்துள்ள கௌரவ ஆளுநர்களாலும் மற்றும் எமது திணைக்கள தலைவர்களாலும் இந்தப் பிரச்சனை தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்த போதிலும் இப் பிரச்சினையை எம்மால் 100 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எமது திணைக்களம் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
- சந்தைகளை குத்தகைக்கு வழங்கும் போது சந்தைக் குத்தகை ஒப்பந்தங்களில் 10 சதவீதக் கழிவு அறவிடப்படமுடியாது என்ற இறுக்கமான வாசகங்கள் உட்படுத்தப்பட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
- சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சிப்பலகைகளிலும் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் அனைவருக்குமே தெரியக்கூடியதாக இவ் 10 சதவீதக் கழிவு அறவிடப்படுவது சட்டமுரணானது என்பது தொடர்பாக தகுந்த காட்சிப்படுத்தல்கள் சந்தைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- உத்தியோகத்தர்கள் அடிக்கடி சந்தைகளுக்கு பயணம் மேற்கொண்டு மேற்பார்வை செய்கின்ற நடைமுறைகளும் இருந்து வந்துள்ளன. ஆயினும் இதனை எம்மால் 100 சதவீதம் கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை. மறைமுகமான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதாவது பேரம் பேசலில் மிகவும் பலவீனமாகவுள்ள விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்களால் அநியாயமான முறையிலேயே இக் கழிவுகள் அறவிடப்படுகின்றன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளோ அல்லது ஏனையோரோ துணிந்து இவ் விடயம் தொடர்பில் முறையிடுவதற்கும் தயங்குகின்றார்கள்.
ஏனெனில் மீண்டும் அதே சந்தையில் அதே வர்த்தகர்களை நாடிச் சென்றே விவசாயிகள் தமது பொருட்களை விற்க வேண்டிய நிலைமை இருப்பதால், வர்த்தகர்கள் தமது பொருட்களை புறக்கணித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் எங்களுக்கு முறையிடுவதில்லை. இருப்பினும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போது நாங்கள் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் உள்ளன. முறைப்பாடுகளை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதில் சிரமம் காணப்படுகின்றது.
முறைப்பாடுகளை உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலேயே நடவடிக்கையை எம்மால் மேற்கொள்ளமுடியும். நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஆதாரங்களை சேகரிப்பதிலும் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன.
பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகிய நான், பல்வேறு சந்தைகளுக்கும் என்னுடைய உத்தியோகத்தர்கள் சகிதம் கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். வியாபாரிகள் சந்தைக்கு பொருட்களை அதிகாலை 3.30 தொடக்கம் எடுத்து வருவார்கள். அந்த நேரத்தில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நாங்கள் சந்தைகளுக்குச் சென்று பார்வையிட்டோம்.
ஒன்று, இரண்டு வியாபாரிகள் இவ்வாறு நடந்து கொள்ளும் போது மறைமுகமாக அவதானித்து அவர்களைக் விசாரித்து கடுமையாக எச்சரிக்கை செய்தோம். அவர்களிடமிருந்து பணத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.
குறிப்பாக மருதனார்மடம் சந்தையில் நான் உட்பட எமது குழுவினர் அங்கே சென்று கண்காணிப்பில் ஈடுபட்டபோது, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யமாட்டோம் எனத் தெரிவித்து 200 இற்கும் அதிகமான வியாபாரிகள் எமக்கு எதிராகப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனால் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்த விவசாயிகளும், பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்த பொதுமக்களுக்கும் எமக்கு எதிராகச் செயற்பட்டனர்.
வியாபாரிகளுக்கு வழக்கமாக வழங்குவதைப்போல் தாம் 10 சதவீதக் கழிவுடன் பொருட்களைக் கொடுக்கின்றோம் எனத் தெரிவித்த விவசாயிகள் இதில் எம்மை தலையிட வேண்டாம் என்று கூறினர். வியாபாரிகள் எமது பொருட்களை வாங்காவிட்டால் அவை பழுதடைந்துவிடும் எனவும் தெரிவித்து எம்முடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் நாம் அங்கிருந்து பின்வாங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
விவசாயிகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்கள். விவசாய சங்கங்கள் அவர்களுடைய பிரச்சனைகளை அந்த இடத்திலேயே அணுகுவதற்கு தயாராக இல்லை. வர்த்தகர்கள் ஒற்றுமையாக செயற்படுவதனூடாக கழிவு விடயத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அநேகமான விவசாயிகள் அதாவது 90 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், தங்களுடைய விவசாய உற்பத்திப் பொருட்களை வாடிக்கையாக ஒரு சில வர்த்தகர்களுக்கே வழங்கி வருகின்றார்கள். நேரடியாக கொண்டு வந்து சந்தையிலும் வழங்குகின்றார்கள்.
அநேகமான பொருட்கள் அவர்களுடைய தோட்டத்திலேயே வியாபாரிகளால் நேரடியாகச் சென்று கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. எந்த விதமான பேரம் பேசலும் இன்றி வியாபாரிகளுக்கு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் செல்கின்றன. இதைவிட, பெரும்பாலும் விவசாயிகள் வர்த்தகர்களிடம் கடன் வாங்கியே தோட்டம் செய்கின்றார்கள்.
இந்நிலையில் 10 சதவீதத்கும் குறைவான விவசாயிகள் இச் சந்தைகளுக்கு புதிதாக வந்து பேரம் பேசலின் மூலமாக விவசாய உற்பத்திப் பொருட்களை அவர்களுக்கு விற்க முனைவது ஏமாற்றத்தையே கொடுக்கின்றது. வர்த்தகர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, விவசாயிகள் அதிகமாகப் பேரம் பேசினால் அதை வாங்க மாட்டார்கள். தங்களுடைய நிபந்தனைகளுக்கு இணங்கி வராவிட்டால் விவசாயிகளிடம் வாங்காமலே புறக்கணித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் விவசாயிகளும் அவர்கள் கேட்கும் விலைக்கே கொடுத்து விட வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.
இந்த நிலைமையை மாற்றுவதற்கு மீனவ சங்கங்கள் தங்களுடைய மீன் சந்தைகளை எவ்வாறு பரிபாலிக்கின்றார்களோ அதே நடைமுறை பின்பற்றப்படுவது சிறப்பாக அமையும். பிடிக்கப்படுகின்ற மீன்களை கடற்கரையில் அந்தச் சங்கத்தின் அனுமதியின்றி யாரும் எந்தவொரு வியாபாரிக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கோ கொடுத்து விட முடியாது. அவ்வாறு மீறி கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் அந்தச் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.
மீன் ஏலம் கூறல் ஊடாக மட்டுமே அதனை யாரும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற இறுக்கமான நடைமுறையை மீனவ சங்கங்கள் தமது கட்டுக்காப்பிலே வைத்து நடைமுறைப்படுத்துவதால் மீனவர்கள் பாதிக்கப்படாமல் தங்களுடைய பொருட்களுக்கு ஏலம் கூறல் மூலம் நியாயமான விலையைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் விவசாயிகளுக்கு இவ்வாறான நிலைமையானது மரக்கறி சந்தைகளில் காணப்படவில்லை. இந்த விடயங்களை கையாளுவதற்கு விவசாய சங்கங்களும் முன்வருவதில்லை.
எமது உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அனைத்து சந்தைகளிலும் பேரம்பேசலுக்குரிய அதாவது ஏலம் கூறலுக்கான இடம் எந்த விதமான கட்டணங்களும் இன்றி இலவசமாக வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அது மட்டுமன்றி அதற்கான தராசு, பற்றுச்சீட்டிடக்கூடிய கருவிகள், ஏனைய காகிதாதிகள் என்பவற்றை இலவசமாக வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்.
இந்த விவசாய சம்மேளனங்கள் அல்லது விவசாய சங்கங்கள், தன்னிச்சையாக ஒரு சில வியாபாரிகளுக்கு வழக்கமாக எந்தவொரு பேரம் பேசலும் இன்றி மரக்கறிகளை கொடுப்பதனை தவிர்த்து, தங்களுடைய விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி தங்களுடைய சங்க உறுப்பினர்கள் ஊடாக அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி அனைத்து மரக்கறிகளையும் பொதுவான ஏலம் கூறும் இடத்துக்கு கொண்டு வந்து ஏலம் கூறுகின்ற இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றினால், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான கழிவுப் பிரச்சினை தானாகத் தீர்ந்து விடும்.
விவசாய சங்கங்கள், விவசாய சம்மேளனங்கள் முன்வந்து விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி ஒருமுகமாக நியாயமான விலையைத் தீர்மானித்து எந்தக் கழிவுகளும் அறவிடாது விவசாயிகளிடமிருந்து பொருட்களை வர்த்தகர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முன்வருவதே, இவ் விடயத்தில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய தீர்வாக இருக்கும், என்று உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கவனத்திலெடுத்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.