கிண்ணியா ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று (24) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
கிண்ணியா நகரசபைப் பகுதியின் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஈச்சந்தீவாகும். விவசாயக் குடும்பங்களே இங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னை போன்ற வான் பயிர்களை யானைகள் சேதப்படுத்தகின்றன. யானைகளால் வீடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இதனால் இம்மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு நன்கு தெரியும்.
எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இப்பகுதியில் யானை வேலி அமைக்கப்பட வேண்டும். சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள யானை வேலி போதுமானதென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து கவனம் செலுத்தி ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.