வீதியில் பயணித்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 22 ஆம் திகதி அன்று இரவு நார்துபான பிரதேசத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியுள்ளார். அதன் பின்னர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு மத்துகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.