களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேக்கவத்தை பகுதியில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த “மிஹிகடவத்தை பகலா” என அழைக்கப்படும் 35 வயதுடையவராவார்.
சந்தேகநபர் நீண்டகாலமாக வீடுகளுக்குள் புகுந்து திருடுவது தொடர்பாக களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது களுத்துறை மிஹிகடவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து சுமார் 15 இலட்சம் பெறுமதியான தங்கப் பொருட்கள், 6 கைத்தொலைபேசிகள், கைத்தொலைபேசியின் பாகங்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.