பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு நேற்று (23) கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தநிலையில் அச்சுறுத்தல்கள் தொடர்பான செய்திகள் நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னைய தமது அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வலையமைப்பின் ஊடாக முக்கியமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக இலங்கை சமீப வருடங்களில் பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்றே தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அச்சுறுத்தல்கள் தோன்றியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.