தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 சந்தேக நபர்களும் செவ்வாய்க்கிழமை (27) வத்தளை மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியை செலுத்திய நபர் மற்றும் இதற்கு உதவிய மேலும் இரண்டு சந்தேக நபர்களே கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31, 32 மற்றும் 40 வயதுகளையுடையவர்கள் என்றும் வத்தளை மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடமிருந்த 4 கையடக்கத் தொலைபேசிகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (28) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.