மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21 வயது இளைஞன் ஒருவரை நேற்று முன்தினம் (19) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் 2014ம் ஆண்டு அதிபராக கடமையாற்றிய போது வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்று வந்த சிறுவன், அங்குள்ள சிறுமி ஒருவருடன் ஏற்பட்ட தகாத முறையினால் கைது செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து குறித்த அதிபரின் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த சிறுவனுடன் அதிபர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிபர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளார். சிறுவனும் பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறியுள்ளார். இந் நிலையில், இருவரும் தொடர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ள போது அதனை குறித்த இளைஞன் வீடியோ எடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் குறித்த இளைஞன் ஓய்வு பெற்ற அதிபரிடம் வீடியோவை வெளியிடுவேன் என அச்சுறுத்தி 9 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரிய நிலையில் இளைஞனிடம் பணம் வழங்கியதற்கான கடிதம் ஒன்றை வாங்கி கொண்டு அந்த பணத்தை அதிபர் அவருக்கு வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் குறித்த இளைஞன் ஓய்வு பெற்ற 63 வயதுடைய அதிபரிடம் மீண்டும் தனக்கு 5 லட்சம் ரூபா பணம் தருமாறும் அல்லது வீடியோவை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து 25 ஆயிரம் ரூபா மட்டும் தருவேன் என தெரிவித்து விட்டு தனக்கு நேர்ந்த கதி தொடர்பாக பொலிஸாரிடம் ஓய்வு பெற்ற அதிபர் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸாரின் ஆலோசனைக்கமைய குறித்த இளைஞனை வெளியிடம் ஒன்றுக்கு அதிபர் வரவழைத்து பணத்தை வழங்கும் போது அங்கு மாறுவேடத்தில் இருந்த பொலிஸார் அந்த இளைஞனை சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.