இலங்கையின் பொருளாதார நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்தங்களைத் தொடர்வது அவசியம் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முந்தைய எதிர்வு கூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையெனவும் குறிப்பிட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுமே இதற்கு காரணம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், பொருளாதார மீட்சி இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நுண் பொருளாதார ஸ்திரதன்மையை பேணுதல், கடன்மறுசீரமைப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது, வருமானத்தை அதிகரித்து வறுமையை குறைப்பதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது ஆகியவற்றிலேயே பொருளாதார மீட்சி தங்கியுள்ளது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.