உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அவர் , இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் முக்கியமான கட்டங்களில், குற்றப்புலனாய்வு பிரிவு எவ்வாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை தவறாக வழிநடத்தியது என்பதை விவரித்துள்ளார். புலனாய்வு அமைப்புகளுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையிலான சாத்தியமான நிதி தொடர்புகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்வவங்களில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை விட, நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அபேசேகர கூறினார்.
தெஹிவளை தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்த குண்டுதாரிக்கு, இராணுவ உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு, அது பின்னர் மறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இரண்டாவதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு வவுணதீவு படுகொலைகள் பற்றி அபேசேகர குறிப்பிட்டார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்ததுடன் இதற்கு சாதகமாக இராணுவ மேலங்கியை குறிப்பிட்டனர். ஏப்ரல் 25 கொலைகளுடன் தொடர்புடைய ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவரை CID கைது செய்த பின்னரே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பான சஹாரான் ஹாஷிம் குழுவுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் சாட்சியமளித்தார். அவர் தாக்குதல்களுக்கு முன்னர் இலங்கை புலனாய்வு அமைப்பினால் பொறுப்பான குழுவுக்கு நிதி வசதிகள் வழங்கப்பட்டதை தெரிவித்திருந்ததை குறிப்பிட்டதாகவும் அபேசேகர கூறினார்.