யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி, அங்கு கடமை புரியும், 25 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்றையதினம் (25) பணியில் இருந்து விலகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 6ஆம் மாதம் 8ஆம் திகதி, காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களை, அவர்களது பொறுப்பதிகாரி சேந்தாங்குளம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கு பொது நபர்கள் சிலருடன் இணைந்து மதுபான விருந்தில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் அவர் கடலில் குளிக்கும் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கட்டித் தழுவி, முத்தமிட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதன்பின்னர் அவருக்கு போதை அதிகமாகியதால் குறித்த பொறுப்பதிகாரியை பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்துச் சென்று மல்லாகம் பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்க வைத்து விட்டு வெளியே வர முயற்சித்தார்.
இதன்போது பொறுப்பதிகாரி அறையை பூட்டிவிட்டு குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் ஆணுறுப்பை பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை தாக்கிவிட்டு வெளியே வந்துள்ளார்.
இந்த விடயத்தினை அந்த பொலிஸ் உத்தியோகத்தர், சக உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தியவேளை சக உத்தியோகத்தர் ஒருவர் அந்த பிரச்சினையை, பொலிஸ் விசேட பிரிவினர் முறைப்பாடுகள் செய்யும் IIP புத்தகத்தில் பதிவு செய்தனர்.
இதனால் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த விசாரணை முறையாக நடைபெறாமல், பொறுப்பதிகாரியை பாதுகாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை என கூறி குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை காலை 8 மணிக்கு அழைப்பதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு செல்வதற்கு சற்று தாமதமாகினால், விசாரணைகளை மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பி இழுத்தடிப்பு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த விடயத்தை IIB புத்தகத்தில் எழுதிய பொலிஸ் உத்தியோகத்தரும், பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும், பொறுப்பதிகாரியால் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்றையதினம் RIB புத்தகத்தில், தான் வேலையிலிருந்து விலகுவதாக எழுதிவிட்டு சென்றுள்ளார் என அறியமுடிகிறது .
குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, தொல்புரத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தண்டனைகளிலிருந்து காப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.