தலைநகரில் தனித்தன்மை வாய்ந்த, நீண்ட கால கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளைக் கொண்டு இயங்கி வரும் ‘புதிய அலை கலை வட்டம்’, தனது இளைஞர் அணியின் மேம்பாட்டை மேலும் கட்டமைக்கும் நோக்கில் ‘இளைஞர் சங்கமம்’ என்ற விசேட நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் 05ஆம் திகதி இந்த மாபெரும் சங்கம நிகழ்வு நடைபெறவுள்ளது என்று அமைப்பின் நிறுவுநர் ராதாமேத்தா தெரிவித்துள்ளார்.
புதிய அலை கலை வட்டமானது கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தனது இளைஞர் அணியை உருவாக்கி, வளர்ந்து வரும் கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்குச் சிறந்ததொரு களத்தை அமைத்துக் கொடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு முதல் இளையோருக்கான பட்டிமன்றம், கலை – இலக்கியப் போட்டிகள் மற்றும் மாதாந்த ஹைக்கூ கவியரங்கம் உள்ளிட்ட பல பயனுள்ள நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ‘இளைஞர் சங்கமம்’ நிகழ்வில், பங்குபெறும் இளையோரின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிப் பாசறைகள் அமைக்கப்படவுள்ளன.
இதன்படி, கலை மற்றும் இலக்கியம், ஊடகத்துறை, விவாதம் மற்றும் பேச்சுக்கலை, விளையாட்டுத்துறை சார்ந்த விசேட பயிற்சிகளை வழங்கும் ஆக்கபூர்வமான களங்கள் இதன்போது உருவாக்கப்படவுள்ளன.
இந்தத் தனித்துவமான களத்தில் இணைந்து கொண்டு, தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் கலை, இலக்கிய, ஊடக ஆர்வமுள்ள இளையோர் உடனடியாக 075 4880172 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி கேட்டுக்கொண்டுள்ளது.










