சிறைக்குச் செல்ல வேண்டிய தரப்பினரே தற்போதைய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள் என்றும், தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த 2024 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் ராஜபக்ஷக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தற்போதைய அரசுக்கு எதிராகத் திட்டமிட்ட சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதுவரை காலமும் இந்த மூன்று தரப்பினருமே மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தார்கள்.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்து ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார், அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்து ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார். இதுவரை காலமும் இந்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே நாட்டை ஆண்டனர். எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் இவர்களின் பரம்பரை ஆட்சி முறைமை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
கடந்த காலங்களில் தாங்கள் செய்த ஊழல்களுக்காக நிச்சயம் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அதன் காரணமாகவே, கடந்த காலங்களில் ஒருவரையொருவர் கடுமையாக மோதிக்கொண்டவர்கள் இன்று சுயநலத்துக்காக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள்.
அதேபோல், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தங்களின் பிரதான அரசியல் பிரசாரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இதைக் கண்டு மஹிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது எவ்வித தடையுமின்றிச் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து, அதன் பின்னணியில் உள்ள படுகொலையாளிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். அதன் விளைவாகவே அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர். சுரேஷ் சலேயின் நலன்விரும்பிகள் என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொள்பவர்கள், தாராளமாக அவருக்காக நீதிமன்றத்தை நாடிச் சட்டப்படியாக எதிர்கொள்ளலாம்.” – என்றார்.










