வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக் கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
SLASSCOM நிறுவனத்தின் அனுசரணையுடன், தேசிய ரீதியிலான இந்த வருடத்துக்கான விருது வழங்கும் விழா கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ‘ITC ரத்னதீப’ நட்சத்திர விருந்தினர் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
SLIIT Northern Uni நிறுவனத்தின் நான்காம் வருட தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் குழுவொன்றே இந்த உயரிய தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளது.
தேனுஜன், மிதுஜனா, யதுட்சன் மற்றும் சகிசன் ஆகிய மாணவர்கள் குழுவே இந்த விருதை வென்றுள்ளனர்.
கலாநிதி பிரசன்னா சுமதிபால மற்றும் திருத்தணிகேசன் ஆகிய விரிவுரையாளர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்படி மாணவர்கள் குழுவினர் தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளனர்.
விரிவுரையாளர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ், மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பப் புத்தாக்கமே தேசிய மட்டத்தில் சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டு இவ்விருதை வென்றுள்ளது.
இலங்கையின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை அமைப்பான SLASSCOM நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த விருதானது, நாட்டின் மிக உயரிய புத்தாக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.










